×

போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை என தீர்ப்பு 2வது மாடியில் இருந்து குதித்து 2குற்றவாளிகள் தற்கொலை முயற்சி: திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு

திருச்சி: போக்சோ வழக்கில் 3 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பை கேட்ட அதிர்ச்சியில் குற்றவாளிகள் 2 பேர் நீதிமன்றத்தின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி திருவானைக்காவல் களஞ்சியம் வெள்ளி திருமுற்றத்தை சேர்ந்தவர்கள் பசுபதி (22), வரதராஜன் (22), திருப்பதி (24). நண்பர்களான 3 பேரும், கடந்த 16.8.2020 அன்று வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, 3 பேருக்கும் தலா 20 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிடப்பட்டது.

இதனை கேட்டு அதிர்ச்சியில் வெளியில் வந்த பசுபதி, திருப்பதி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில், அவர்களுக்கு கை, கால்கள் முறிந்தது. 2 பேரையும் போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் நேற்று திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை என தீர்ப்பு 2வது மாடியில் இருந்து குதித்து 2குற்றவாளிகள் தற்கொலை முயற்சி: திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy ,POCSO ,Trichy Thiruvanaikaval ,Dinakaran ,
× RELATED திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில்...